Friday, 26 October 2012

பித்தத்திலிருந்து விடுதலை பெற....!

மசாலா உணவுகள் பேன்றவற்றைப் பார்த்தால் சாப்பிடலாமா, வேண்டாமா என்ற அச்சம். அதிகம் சாப்பிடலமா சாப்பிட்டால் ஜீரணமாகுமா நெஞ்சு கறிக்குமா எதுக்கிக்கெண்டே இருக்குமா இதுபேன்ற கேள்விகளுக்கெல்லாம் முக்கிய காரணமாக விளங்குவது பித்தம். இந்த பித்தம் தெடர்பான பிரச்சினைகளையும், அதனை பேக்கும் எளிய இயற்கை மருத்துவ முறைகளையும் இப்போது பார்ப்பேம்...

* இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.

* இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.

* பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

* எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.

* ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.

* பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.

* விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.

* அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.

* பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.

* கமலா பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும்.

* நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.

* எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.

* அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.

மூட்டுவலிக்கு நிவாரணமளிக்கும் அத்திப்பால்!

அமைந்து முழுமையான இலைகளை உடைய பெரு மர வகை. பால் வடிவச் சாறு உடையது. பூங்கொத்து வெளிப்படையாகத் தெரியாது. அடி மரத்திலேயே கொத்துக் கொத்தாகக் காய்க்கும். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இலை, பிஞ்சு, காய், பழம், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படும்.

* அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய், சர்க்கரை கலந்து காலை, மாலை, கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்த வயிற்றுப் போக்கு, பெரும்பாடு, சிறுநீரில் குருதி கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.

* அத்திப் பாலை மூட்டுவலிகளுக்குப் பற்றிட விரைவில் வலி தீரும்.

* முருங்கை விதை, பூனைக்காலி விதை, நலப்பனைக் கிழங்கு, சர்க்கரைக்வள்ளிக் கிழங்கு சமனளவாக இடித்துச் சலித்த 5 கிராம் பொடியில் 5 மி.லி. அத்திப்பாலைக் கலந்து காலை, மாலையாக 20 நாள்கள் கொடுக்க அளவு கடந்த தாது வளர்ச்சியைக் கொடுக்கும்.

* அத்திப் பட்டை, நாவல் பட்டை, கருவேலம்பட்டை, நறுவிளம்பட்டை சமனளவு இடித்த பொடியில் 5 கிராம் 50 மி.லி. கொதி நீரில் ஊறவைத்து வடிகட்டி நாள்தோறும் மூன்று வேளை கொடுத்துவர பெரும்பாடு, சீதபேதி, இரத்தப்பேதி ஆகியவை தீரும்.

* அத்திப்பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மாம்பட்டை, சிறுசெருப்படை சமனளவு எடுத்து வாழைப்பூச் சாற்றில் அரைத்துச் சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் காலை, மாலை வெந்நீரில் கொள்ள ஆசனக் கடுப்பு, மூலவாயு, இரத்த மூலம், மூலக்கிராணி (வயிற்றுப் போக்கு) தீரும்.

* அத்திப்பழத்தை உலர்த்தி இடித்துப் பொடி செய்து 1 தேக்கரண்டி காலை, மாலை பாலில் உட்கொள்ள இதயம் வலுவாகும். இரத்தம் பெருகும்.

* அத்தி, அசோகு, மா ஆகியவற்றின் பட்டைகளைச் சேர்த்துக் காய்ச்சிய குடிநீர் காலை, மாலை குடித்து வர தீராத பெரும்பாடு தீரும்.

ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவு!

உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.

உணவு உண்ணும் முறை:

உடலில் இயக்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய மூளை சரியாக இயங்க வேண்டுமானால், பிற தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும். இந்த ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகளாகும்.

துவர்ப்பு ரத்தம் பெருகச் செய்கிறது. இனிப்பு தசை வளர்க்கிறது. புளிப்பு கொழுப்பை உற்பத்தி செய்கிறது. கார்ப்பு எலும்பை வளர்த்து உறுதியாக்குகிறது. கசப்பு நரம்பை பலப்படுத்துகிறது. உவர்ப்பு உமிழ் நீரைச் சுரக்கச் செய்கிறது. உடல் தாதுக்கள் பெருக்கவும் அவற்றை உடலுக்கு ஏற்றவாறு சமன் செய்வதும் ஆறு சுவைகள் கொண்ட உணவுகளாகும்.

துவர்ப்பு:

உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. விருப்பு வெறுப்பில்லாதது. வியர்வை, ரத்தப்போக்கு, வயிற்றுப் போக்கை சரி செய்யும். வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அத்திக்காய் போன்றவை துவர்ப்பு சுவையுடையவை.

இனிப்பு:

மனத்துக்கும் உடலுக்கும் உற்சாகத்தைத் தரக்கூடியது. இது அதிகமானால் எடை கூடும். உடல் தளரும். சோர்வும் தூக்கமும் உண்டாகும். பழங்கள், உருளை, காரட், அரிசி, கோதுமை, கரும்பு போன்ற பொருள்களில் இனிப்புச் சுவை இருக்கிறது.

புளிப்பு:

உணவின் சுவையை அதிகரிக்கும் சுவையிது. பசியைத் தூண்டும். நரம்புகளை வலுவடையச் செய்யும். இது அளவுக்கு அதிகமானால், பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும். உடல் தளரும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நாரத்தங்காய் போன்றவை புளிப்புச் சுவை கொண்டவை.

காரம்:

பசியைத் தூண்டும். செரிமானத்தைத் தூண்டும். உடல் இளைக்கும். உடலில் சேர்ந்துள்ள நீர்ப்பொருளை வெளியேற்றும். ரத்தத்தைத் தூய்மையாக்கும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவை காரச்சுவை கொண்டவை.

கசப்பு:

பெரும்பாலும் வெறுக்கக் கூடிய சுவை. ஆனாலும் உடலுக்கு மிகுந்த நன்மையைத் தரக்கூடிய சுவை இதுவே. இது, நோய் எதிர்ப்புச் சக்தியாகச் செயல்படும். தாகம், உடல் எரிச்சல், அரிப்பு, காய்ச்சல் ஆகிய இவற்றைத் தணிக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பாகற்காய், சுண்டை, கத்தரி, வெங்காயம், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம் பூ, ஓமம் போன்றவற்றிலிருந்து கசப்புச் சுவையைப் பெறலாம்.

உவர்ப்பு:

அனைவரும் விரும்புகின்ற சுவை. தவிர்க்க இயலாதது. உமிழ் நீரைச் சுரக்கச் செய்யும். மற்ற சுவைகளைச் சமன் செய்யும். உண்ட உணவைச் செரிக்க வைக்கும். கீரைத்தண்டு, வாழைத் தண்டு, முள்ளங்கி, பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் உவர்ப்புச் சுவை மிகுதியாக உள்ளது.

உணவு வகைகளை சுவைக்கு ஒன்றாகச் சமைத்து உண்பதாக வைத்துக் கொள்வோம். இலையில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும். எந்தச் சுவையை இறுதியில் உண்ண வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.

சிலர், இலையில் உணவு பரிமாறப்படும் போதே ஒவ்வொன்றாக உண்டு கொண்டேயிருப்பார்கள். அது தவறு. உணவு முழுமையாகப் பரிமாறப்பட்ட பின்பும், முதலில் உண்ண வேண்டியது, இனிப்பு. அடுத்து அடுத்ததாகப் புளிப்பு, உப்பு, காரம், கசப்பு ஆகிய சுவைகளை உண்ட பின்பு இறுதியாகத் துவர்ப்புச் சுவையை உண்ண வேண்டும்.

இவ்வாறாக உணவை உண்பதனால், உடம்பில் ஆட்கொண்டிருக்கும் பஞ்ச பூதங்கள் சமநிலை பெறும். இவ்வாறு உண்ட பின்பு முடிவாக தயிரும் உப்பும் கலந்து உண்டால், உணவில் கலந்துள்ள வாத பித்த ரசாயங்கள் என்னும் முக்குற்றங்கள் நீங்கிவிடும். உடம்பில் நோய் தோன்றுவதற்கான கூறுகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும்.

ஆறு சுவை உணவை மட்டும் உண்டுவிட்டால் போதாது. அதற்கு உரிய காலத்தில் உணவு உண்ண வேண்டும். ஞாயிறு எழும்போதும், மறையும் போதும் எந்த உணவையும் உண்ணக் கூடாது. கோபமோ கவலையோ துக்கமோ ஏற்படும் போதில் உணவு உண்பதைத் தவிர்த்திட வேண்டும். அதே போல், நின்று கொண்டும் கைகளை ஊன்றிக் கொண்டும் உணவு உண்ணக் கூடாது.

எப்போதும் உணவ உண்ணும்போது, கிழக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது ஆயுளை வளர்க்கும். தெற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது புகழை வளர்க்கும். மேற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது செல்வத்தை வளர்க்கும். வடக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது அழிவுக்கு வழி வகுக்கும்.

எவ்வகை உணவாயினும் அதை உண்பதற்கு வாழை இலையைப் பயன்படுத்தினால், உணவினால் உண்டாகக் கூடிய தீமைகள் முற்றிலும் நீங்கிவிடும். உணவு உண்டு முடிந்த பின்பு குறைந்த அளவு நூறு அடி தூரமாவது நடந்து வர வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. படுக்கையில் அமர்ந்து கொண்டு உணவுண்ட பின்பு அப்படியே படுத்துக் கொள்கின்றவர்களுக்காகப் பரிதாப் படலாமே ஒழிய வேறு ஒன்றும் செய்ய இயலாது.

உணவின் சுவைக்கும் உடல் நலத்துக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொண்டால், உடல் நோய்களைத் தீர்க்கலாம். உடலில் நோய்கள் வராமல் தடுக்கலாம். உடல் உறுப்புகள் நன்கு வளரச் செய்யலாம். உடல் உறுப்புகள் பழுதில்லாமல் செழிப்பாகச் செம்மையாக அமைந்துவிட்டால் உடல் இன்பமாக இருக்கும். அதன்பின் வாழ்க்கை இன்பமாக இருக்கும். உடலில் ஏற்படும் குறைபாடுகளுக்கு ஏற்ப மனம் இருக்கும்.

நோயுடைய உடலைக் கொண்ட மனம், மகிழ்ச்சியை இன்பத்தை எண்ணாமல் துன்பப்படும். நாக்கின் விருப்பத்துக்கு ஏற்ப உணவை உண்ணும் நாகரிகம் வளர்ந்து வருகிறது. எதை எப்போது சாப்பிடுவது என்றில்லாமல் எப்போதும் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்னும் பழக்கத்தினால், நோய்களுக்கு இடமளிப்பவர்கள் இருக்கின்றார்கள். உயிர் வாழ்வதற்கு உணவு வேண்டும் என்பதற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் உண்டு கொண்டிருந்தால் தம்மைத்தாமே வருத்தத்தில் ஆழ்த்திக் கொள்வதாகும்.

'உண்பது நாழி' என்று, உணவின் அளவு குறிக்கப்படுகிறது. அதுவும் ஒரு நாளைக்கு எத்தனை முறை என்பதும் கூறப்பட்டுள்ளது. வாழ்க்கையை வாழும் முறையை அறிந்தவர்கள் சொல்லும் சொல்லை இகழ்ந்தால் வாழ்க்கையை இகழ்ந்தது போலாகும். ஆறு சுவையுடைய உணவுகளை உண்டு வந்தால், இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

சில சமயத்தில் ஆறு சுவை உணவை உண்ண இயலாமல் போகலாம். இயலும் போது உண்டு வந்தால் அவை சமநிலைக்கு வந்து உடல் நிலையைப் பாதுகாக்கும்

எண்ணற்ற வியாதிகளுக்கு மருந்தாகும் முருங்கை!

எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள். கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது. அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம்.

முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம்.

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.

முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங்களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.

முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து. கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.

முருங்கைக் காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்தமானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.

முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம்.

முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் நல்ல டானிக்குகள் செய்ய பயன்படுகிறது. பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி உடனே நின்று விடும்.

இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம் வராமல் தள்ளிப்போகும்.

மேலும் இந்தப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான் என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும்.

முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால், இரத்த சுத்தியும், எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், அயன், வைட்டமின் உள்ளது.

கர்ப்பப்பையின் மந்தத் தன்மையை போக்கி, பிரசவத்தை துரிதப்படுத்தும். இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். ஆஸ்துமா, மார்சளி, சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது. முருங்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ் பலவீனத்தைப் போக்கும். ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும், விந்து விருத்திக்கும் சிறந்தது.

முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருங்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன், இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிருத்தி செய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சள்காமாலை, குடலில் ஏற்படும் திருகுவலி, வயிற்றுப்போக்கு கட்டுப்படும். விதையில் இருந்து என்னை தயாரித்து வாயுப்பிடிப்பு, மூட்டுவலிகளில் பயன்படுத்தலாம். முருங்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் சேர்த்துப் பருகிவர காசநோய், கீழ்வாயு, முதுகுவலி குணப்படும்.

வைட்டமின்கள் :

முருங்கை இலை 100 கிராமில் 92 கலோரி உள்ளது.

ஈரபதம் - 75.9%

புரதம் - 6.7%

கொழுப்பு - 1.7%

தாதுக்கள் - 2.3%

இழைப்பண்டம் - 0.9%

கார்போஹைட்ரேட்கள் - 12.5%

தாதுக்கள், வைட்டமின்கள்,

கால்சியம் - 440 மி.கி

பாஸ்பரஸ் - 70 மி.கி

அயம் - 7 மி.கி

வைட்டமின் சி 220 மி.கி

வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் சிறிய அளவில்